இந்தாண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக முதல்வர் திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்தார்.
கட்சி ரீதியிலான நிகழ்ச்சியில் பங்கேற்க வந்ததால் அரசு அதிகாரிகள் யாரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணத்தில் பங்கேற்கவில்லை. திருச்சி மாநகரில் உள்ள நத்தர்ஷா தர்காவுக்கு முதல்வர் வருகை தந்த போது திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் முன்னதாக வருகை புரிந்துக் காத்திருந்தார்.
அப்போது ஆணையரை புகைப்படக்காரர் புகைப்படம் எடுத்ததும் கோபமான மாநகராட்சி ஆணையர் எதுக்கு போட்டோ எடுக்கிறீங்க டெலிட் பண்ணுங்க என்று சத்தம் போட்டார். இது பற்றி நாம் மாநகராட்சி ஆணையரிடம் கேட்டபோது, "நான் அலுவல் வேலையாக வரவில்லை. முதல்வரை சந்திக்கவோ, பார்க்கவோ வரவில்லை. பிரார்த்தனை செய்ய வந்தேன்" என கூறியவாறே தர்காவிற்கு சென்றவர் முதல்வர் வரும் வரை தர்கா கேட் அருகே அமர்ந்திருந்தார். இந்த நிலையில் முதல்வர் தர்காவிற்கு வந்தபோது அவர் வரவேற்று வணங்கினார். பின்னர் முதல்வர் செல்லும் வரை உலமாக்கள் சந்திப்பு முடிந்து செல்லும் போது வணங்கி விடை பெற்றார். கடைசி வரை ஆணையர் பிரார்த்தனை செய்யவே இல்லை. தேர்தல் நேரத்தில் முதல்வர், அமைச்சர்கள் பிரச்சாரத்தின் போது அரசு அதிகாரிகள் உடன் வர கூடாது என்பது மரபு.
ஆனால் ஆணையர் மரபை மீறி முதல்வரை வரவேற்க வந்த மாநகராட்சி ஆணையர் தேர்தல் நேரத்தில் சந்தித்தது, தனது பதவி காலத்தை மீண்டும் திருச்சியிலே நீடிக்க செய்ய கோரிக்கை விடுத்தாரா என்பது உலகளும் நத்தஹர்வலி மகானுக்கும்- நாடாளும் முதல்வருக்குமே வெளிச்சம்.
இதனிடையே, மழைநீர் சாக்கடையுடன் கலந்து தர்கா புனித ஸ்தலத்தில் நீர் நிறைந்து குடியிருப்புகளில் புகுந்தது. இது குறித்து பொதுமக்கள் பல முறை தகவல் கூறியும் கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம், முதல்வர் வருகையையொட்டி கோட்டை ஸ்டேஷனுக்கு அருகில் குப்பை கிடங்காக மாறிய சாக்கடை தூர்வாரி சுவற்றை இடித்து குப்பைகள் அகற்றினர்.