அதிமுக ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் மற்றும் ஒன்றியச் செயலாளர் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக சார்பில் விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், ராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆதரவாளர்களுக்கும், ஒன்றியச் செயலாளர் மருது பாண்டியன் ஆதரவாளர்களுக்கும் இடையே கோஷம் போடுவது, விசில் அடிப்பதில் மோதல் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடிதடியாக மாறியது. இருதரப்புக்கும் மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து போலீசார் தகராற்றில் ஈடுபட்ட சுரேஷ் என்பவரை விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இரு தரப்பினரையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேசிய மாவட்டச் செயலாளர் முனியசாமி, “உட்கட்சி பிரச்சினையை மனதில் வைத்துக்கொண்டு பொது இடத்தில் தகராற்றில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. நடந்த சம்பவம் குறித்து கட்சித் தலைமையிடம் புகார் அளிக்கப்படும்” என்றார்.