![child marrigae coimbatore police investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/LoqI1wl3abbx4v1HoAiUBPk3ERJI6dWMzerHaaBYz-Y/1639931343/sites/default/files/inline-images/arrested_16.jpg)
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ளது கோமங்கலம். இதேப் பகுதியைச் சேர்ந்த வீரகுமார் (வயது 20). என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். வீரகுமாருக்கும், கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 13- ஆம் தேதி அன்று பொள்ளாச்சியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்து கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்று, அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த சிறுமி கோவை மாநகராட்சி பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்ததும், திருமணத்துக்கு பிறகு அவரைக் கட்டாயப்படுத்தி வீரகுமார் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து, புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வீரகுமார் மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர். அதேபோல், வீரகுமாரின் பெற்றோர், சிறுமியின் பெற்றோர் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.