![INCIENT](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ie06arKPsH5__ysZlzGOjcGA1LvddHhSjgLSUGqGpyc/1623314227/sites/default/files/inline-images/1081_0.jpg)
கள்ளக்குறிச்சியில் கர்ப்பிணி பெண்ணை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில், கர்ப்பிணி உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது தமிழ்நாடு முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆலத்தூர் அருகே இன்று (10.06.2021) காலை கர்ப்பிணி பெண் உட்பட மூன்று பேருடன் சென்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸின் டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், ஆலத்தூர் ஏரிக்கரை அருகே உள்ள மரத்தில் பலமாக மோதியது. இந்த சம்பவத்தில் கர்ப்பிணி பெண்ணான ஜெயலட்சுமி, உறவினர்கள் செல்வி, அம்பிகா ஆகியோர் இறந்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர், ஆம்புலன்சில் இருந்த உதவியாளர் இருவரும் காயங்களுடன் தப்பித்தனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண் சென்ற நிலையில், இந்த விபத்து நிகழ்ந்து 3 பேர் உயிரிழந்தது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
![INCIDENT](http://image.nakkheeran.in/cdn/farfuture/w3OhB6-4uVUB21azscXXToP-RDO5XvWV3iEha_N4VSw/1623314277/sites/default/files/inline-images/yy_6.jpg)
இந்நிலையில், உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரண நிதியை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணான ஜெயலட்சுமியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், ஜெயலட்சுமியின் மாமியார் செல்வி, நாத்தனார் அம்பிகா ஆகியோரது குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.