டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை கள ஆய்வு மேற்கொள்ள வருகை தந்த தமிழக முதல்வருக்கு பொதுமக்களும், விவசாயிகளும் திமுக தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை இரண்டுநாள் பயணமாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முதற்கட்ட ஆய்வை தஞ்சையில் மேற்கொண்டவர், திருவாரூர் மாவட்டம் வழியாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணி வருகை தந்தார். அப்போது வேளாங்கண்ணி ஆர்ச் அருகே தமிழக முதல்வருக்கு அங்கு திரண்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் தாரை தப்பட்டைகள் முழங்க, வான வேடிக்கைகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதல்நாள் ஆய்வை மேற்கொள்ளும் தமிழக முதல்வர் இன்று காலை நாகை மாவட்டத்தில் ரூ 3.50 கோடி திட்ட மதிப்பீட்டில் ஆறுகள் மற்றும் வடிகால்களில் 30 இடங்களில் தூர்வாரும் பணிகளை கள ஆய்வு செய்கிறார். அதில் நாகையை அடுத்த கருவேலங்கடையில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்றரை கிலோ மீட்டர் தூரம் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்லாறு வடிகால் தூர்வாரும் பணிகளை கள ஆய்வு செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் நடைபெறும் ராமச்சந்திரன் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை காலை 10.45 மணிக்குப் பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து திருவாரூர் மாவட்டத்துக்குச் சென்று அங்கு நடைபெறும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். முதல்வருடன் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எவ.வேலு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் வருகை தந்துள்ளனர்.