சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த மார்ச் மாதம் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாகக் கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகள் அளித்த புகார் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 60 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஹரிபத்மனுக்கு கடந்த ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.
மேலும் மாணவிகள் அளித்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மகளிர் ஆணையம் பரிந்துரைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளின் கீழ் அடையாறு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது குறித்து போலீசார், சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தி இருந்தனர். இது தொடர்பான வழக்கு சென்னை சைதாப்பேட்டை ஒன்பதாவது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த சூழலில் 250 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை ஒன்பதாவது நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் தாக்கல் செய்திருந்தனர்.
அதேசமயம் நடனம் கற்றுக் கொடுப்பதாகக் கூறி மற்றொரு ஆசிரியரும் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக மற்றொரு மாணவியும் போலீசில் புகார் அளித்திருந்தார். மேலும் புகாரில் தனது பெயரைக் குறிப்பிடாமல் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “குற்றம் சாட்டப்பட்ட நடன ஆசிரியருக்கு காவல்துறையில் செல்வாக்கு இருப்பதால் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (22.12.2023) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “இந்த குற்றச்சாட்டு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மனுதாரர் அளித்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி அதில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிடுகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரியை நியமித்து 60 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனச் சென்னை மாநகரக் காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.