ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதே எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம் ஒன்றை இந்திய போர் விமானங்கள் வெடி குண்டு வீசி அழித்தது. பயங்கரவாத முகாம் அழிப்பு நடவடிக்கையில், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிராஜ் -2000 ரக விமானங்கள் ஈடுபட்டன. புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்திய விமானப்படை தக்க பதிலடி கொடுத்துள்ளது.
இந்த நிலையில் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம், சவலாப்பேரியைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் சுப்பிரமணியன் மனைவி கிருஷ்ணவேணியிடம் செய்தியாளர்கள் இந்திய விமானப்படை தாக்குதல் குறித்து கேட்டனர்.
கணவர் சுப்பிரமணியன் திருவுருவப்படத்திற்கு அருகில் நின்ற அவர், தனது அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு கூறுகையில், 44 பாதுகாப்பு படையினரின் தியாகத்திற்கு கிடைத்த பரிசுதான் இது. இந்திய விமானப்படை வீரர்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன் என்றார்.
சுப்பிரமணியன் தந்தை கூறுகையில், இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததில் பெருமைப்படுகிறேன். அதே நேரத்தில் இதில் எந்த பாமர மக்களும் மற்றும் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்றார்.