Skip to main content

சென்னை திரும்புகிறார் முதல்வர்

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

Chief Minister returns to Chennai

 

8 நாள் அரசு முறைப் பயணமாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்குச் சென்றுள்ளார். முதல்வரின் இந்த வெளிநாட்டுப் பயணத்தில், முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வரின் உதவியாளர் தினேஷ், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்வரின் செயலாளர்கள் உமாநாத், அனு ஜார்ஜ், தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், செய்தித்துறை இயக்குநர் மோகன் ஆகியோர் சென்றுள்ளனர். சிங்கப்பூரில் இருந்து தனது இரண்டு நாள் அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று ஜப்பான் நாட்டின் ஒசாகாவிற்கு புறப்பட்டுச் சென்றார்.

 

நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டின், ஒசாகா மாகாணத்தில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் ஏர் பேக் இன்பிளேட்டர் (Airbag Inflator) தயாரிப்பு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கொமாட்சு நிறுவனத்தின் ஒசாகா தொழிற்சாலையைப் பார்வையிட்டார். கடந்த 29 ஆம் தேதி டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் வெளிநாட்டு அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் வெளிநாட்டு மாநாட்டில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.

 

மாநாட்டில் கலந்து கொண்ட மற்ற வணிக நிறுவனங்களை சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் அழைப்பு விடுத்தார். நேற்று என்இசி ஃபியூச்சர் கிரியேஷன் ஹப் நிறுவனத்துக்குச் சென்று பார்வையிட்டார். இந்நிலையில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் பயணங்களை முடித்துக் கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றிரவு சென்னை திரும்புகிறார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்