பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், 10% இட ஒதுக்கீட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சட்டத் திருத்தம் செல்லும் என்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பெலா திரிவேதி, பர்திவாலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். எனினும், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யுயு லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் எதிராகத் தீர்ப்பளித்துள்ளனர்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "உச்சநீதிமன்றத் தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்தில் ஒரு பின்னடைவு. சமூக நீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.