Skip to main content

இயக்குநர் சொர்ணம் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின் 

Published on 08/06/2021 | Edited on 09/06/2021

 

Chief Minister MK Stalin paid tribute to the late Director Sornam


கலைஞரின் உறவினரும் திரைப்பட இயக்குநரும் திரைக்கதை ஆசிரியருமான செர்ணம் இன்று (08.06.2021) உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள இரங்கலில், “திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான சொர்ணம், திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முதல் பிள்ளையான முரசொலியை உருவாக்கிய ஆற்றல்மிகு எழுத்தாளர்களில் ஒருவரான இவர், ஆரம்ப கால துணையாசிரியராக இருந்து ‘பிறை வானம்’ என்ற தொடரை முரசொலியில் எழுதியவர். மாணவப் பருவத்திலேயே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கூர்மைப்படுத்தப்பட்ட சொர்ணம், சமுதாய சீர்திருத்தக் கருத்துகள் அடங்கிய ‘விடைகொடு தாயே’ என்ற புரட்சிகர நாடகத்தின் மூலம் கழகத்தின் கொள்கைகளைப் பட்டிதொட்டிக்கெல்லாம் கொண்டு சென்றவர். கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுச்சியை ஏற்படுத்திய இந்த நாடகம்  கழக மாநாடுகளில் நடத்தப்பட்டது.

 

எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் 17 படங்களுக்கு உரையாடல் தீட்டிய அவர், முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய ‘ஒரே ரத்தம்’ எனும் திரைப்படம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். நான் நடத்திய இளைய சூரியன்  வார ஏட்டின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய இவர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரித் தலைவர், தமிழ்நாடு திரைப்படப் பிரிவுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றி, கலை இலக்கியப் பணிக்குப் பெருமை சேர்த்தவர்.

 

முரசொலியில் ஞாயிறுதோறும் வெளிவந்த புதையல் இதழின் முழுப் பொறுப்பையும் ஏற்று, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எழுத்தோவியங்களை என்றும் பாதுகாக்க வேண்டிய கருத்துக் கருவூலமாக்கியவர். கலைஞர் விருது வழங்கி கெளரவப்படுத்தப்பட்டவர்.

 

எழுத்தாளர், இயக்குநர், வசனகர்த்தா, பத்திரிகையாளர் என்று பன்முகத் திறமையாளராகத் திகழ்ந்த திரு. சொர்ணம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்