சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா கடந்த மே மாதம் 23ஆம் தேதி (23.05.2024) பணி ஓய்வு பெற்றார். இதனையடுத்து உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி ஆர். மகாதேவன் நியமிக்கப்பட்டார். இத்தகைய சூழலில் தான் நீதிபதி மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்தது. இதன் காரணமாக அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராமை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமிற்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இன்று (27.09.2024) சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஸ்ரீராம் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மும்பை பல்கலைக்கழகம் மற்றும் லண்டனில் சட்டப்படிப்பை முடித்தவர் ஆவார். இவர் கடந்த 1986ஆம் ஆண்டு வழக்கறிஞர் பணியைத் தொடர்ந்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், மற்ற நீதிபதிகள், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, ரகுபதி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எனப் பலரும் கலந்து கொண்டனர்.