![chennai raj bhavan incident Police complaint on behalf of Governor's House](http://image.nakkheeran.in/cdn/farfuture/Sx6LENFaxx6B1BEdsrJyAC1ck9jt0ipSFp22XnJS8Dw/1698295407/sites/default/files/inline-images/karukka_0.jpg)
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கருக்கா வினோத். இவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதனைப் பற்ற வைத்து நேற்று (25.10.2023) பிற்பகல் ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசியுள்ளார். உடனடியாக அங்கு இருந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றுள்ளதும், ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அவர் மொத்தமாக, பெட்ரோல் நிரப்பிய நான்கு பாட்டில்களைக் கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இவர் மீது வெடிப்பொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரவுடி கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நவம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ரவுடி கருக்கா வினோத் இன்று (26.10.2023) காலை 06.30 மணியளவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
![chennai raj bhavan incident Police complaint on behalf of Governor's House](http://image.nakkheeran.in/cdn/farfuture/NJiDpT6k-ALUKKQMDGL_fdtyNSyQDih15MU3Ot-HOTw/1698295427/sites/default/files/inline-images/raj-bhavan-file-1-official.jpg)
இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் ஆளுநரின் துணைச் செயலாளர் செங்கோட்டையன் சென்னை பெருநகர காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில்,“நேற்று பிற்பகல் 02.45 மணியளவில் ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடந்துள்ளது. பெட்ரோல் குண்டுகளுடன் வந்த மர்ம நபர்கள் ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவாயில் வழியாக நுழைய முயன்றபோது ஆளுநர் மாளிகை பாதுகாப்பு அதிகாரிகளால் தடுக்கப்பட்டனர். ஆளுநர் மாளிகை பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கையாக இருந்ததால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. அதே சமயம் பிரதான நுழைவாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, பெரிய சத்தத்துடன் வெடித்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.