ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் மனிதாபிமான முறையில் விடுதலை செய்ய கடந்த 4 ஆண்டுகளில் இரண்டு முறை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் கைதிகளின் விடுதலை குறித்து 3 மாதத்தில் முடிவெடுக்கும்படி உள்துறை அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் கைதிகளின் உடல்நலம் மற்றும் மனநலம் குறித்த விவரங்களை கேட்டு தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியது. ஆனால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளியானது.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி:-
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து ஜனாதிபதி மறுப்பு வெளியிட்டிருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்று சொல்லியிருப்பதாகவும் வந்த செய்தி இடிபோலே என்னை தாக்கியிருக்கிறது. ஏனென்று சொன்னால் அந்த 7 பேருக்காக சட்டமன்றத்தில் மிகப்பெரிய அளவில் பல்வேறு அறவழி கருத்துக்களையும், போராட்டங்களையும் நான் நடத்தியவன். அதேபோன்று தனியரசு, கருணாஸ் ஆகியோரும் இதற்கு ஒத்துழைத்தார்கள்.
இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட அவர்களின் விடுதலை குறித்து வலியுறுத்தினேன். இதுகுறித்து சாதகமாக முடிவை எடுப்பதாக அரசு சார்பில் தெரிவித்திருந்தார்கள். நான் மிகுந்த நம்பிக்கையோடு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் அவர்களிடம் இதுகுறித்து எடுத்துக்கூறி ஆறுதல் கூறினேன். இப்போது ஜனாதிபதியே இந்த செய்தியை சொல்லியிருக்கிறார் என்று அறிந்தபோது என்னுடைய வேதனையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
27 ஆண்டு காலமாக துக்கம், துயரம், வேதனை, வலி, மனஉளைச்சல், நோய் ஆகியவற்றோடு போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு மனிதாபிமானம் காட்டவில்லை என்று சொன்னால் காந்தி பிறந்த இந்த நாட்டில், கவுதம புத்தர் பிறந்த இந்த நாட்டில், விவேகானந்தர் பிறந்த இந்த நாட்டில் இவ்வளவு பெரிய கொடுமையை நாம் அவர்களுக்கு இழைக்கிறோம் என்பது மிகப்பெரிய வெட்கக்கேடு. வரலாறு எதிர்காலத்திலே தனது கண்டனத்தை தெரிவிக்கும் என்பதில் அய்யமில்லை.
இந்த நேரத்திலே அற்புதம்மாள் அவர்களுக்கு என்ன ஆறுதல் கூறுவதென்றே எனக்கு தெரியவில்லை. இந்த அன்புத் தாய் தனது மகன் விடுதலைக் காக 27 ஆண்டு காலம் போராடியிருக்கிறார். பேரறிவாளனை அவர்கள் வயிற்றிலே சுமந்தது 10 மாதங்கள்தான். கருவரையில் அவர் சுமந்தபோது அவர் பட்ட வலிகளைவிட 27 ஆண்டு காலமாக அவர் பட்ட துன்பத்திற்கும், துயரத்திற்கும் அளவில்லை.
ஒவ்வொரு நாளும் தனது மகன் விடுதலை ஆகி வருவான். தன்னுடைய மடியில் படுக்க வைத்து அவனுடைய தலையை கோதி விடலாம் என்று மிகுந்த எதிர்பார்ப்போடு காந்திருந்த அந்த தாய்க்கு தற்போது ஜனாதிபதியிடம் இருந்து வந்த அந்த செய்தி எவ்வளவு பெரிய துன்பத்தை தரும் என்பதை என்னால் உணர முடிகிறது. ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை.
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும், பொதுமக்களும்தான் இந்த விஷயத்தில் இனி முடிவு எடுக்க வேண்டும். என்னுடைய சக்திக்கு அப்பாற்பட்டு எப்படியெல்லாம் போராட வேண்டுமோ அப்படியெல்லாம் போராடிவிட்டேன். இனி என்ன செய்வது என்று எனக்கும் தெரியவில்லை. மிகுந்த மனவேதனையில் இருக்கிறேன் என்பதை தமிழ் சமூகத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன்.