சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், "கடந்த மூன்று மாதங்களில் சென்னையில் 2.10 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வீடு, வீடாக சென்று 17,011 பேரை பரிசோதனை செய்ததில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
வீடு, வீடாக வரும் மாநகராட்சி பணியாளர்களிடம் மக்கள் தங்களுக்குள்ள அறிகுறிகளை கூற வேண்டும். சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. மாநகராட்சி நடத்தும் மருத்துவ முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவ முகாம்கள் மூலம் 40,882 பேர் அறிகுறியுடன் கண்டறியப்பட்டனர். மருத்துவ முகாம் தேவைகளுக்காக அண்ணா பல்கலைக்கழகத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். நாளை மாலைக்குள் அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியை ஒப்படைக்காவிடில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் காலத்தில் அரசு கட்டிடங்கள், பள்ளி, கல்லூரி கட்டிடங்களை ஒப்படைக்க வேண்டும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் கூறினார்.