சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், "கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களுக்குப் பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோயம்பேட்டிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது பாதிப்பு கண்டறியப்படுவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லை; பரிசோதனை மூலமே பாதிப்பு தெரியவந்துள்ளது. தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம். பரிசோதனையை அதிகரிப்பதால் பாதிப்பு அதிகமாகத் தெரிய வருகிறது. தமிழகத்தில் இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையைக் கண்டு மக்கள் அஞ்சத் தேவையில்லை; ஆனால் அலட்சியமாகவும் இருக்கக்கூடாது. கரோனா உறுதி செய்யப்பட்டாலும் பதற்றம் கொள்ளத் தேவையில்லை. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொற்று பரவாமல் தடுக்க முக்கியத்துவம் வழங்கப்படுகிறது" என்றார்.
இதனிடையே கோயம்பேடு சந்தை முழுவதும் கிருமி நாசினி தெளிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.