![v Change the Chairman of the Church Committee!](http://image.nakkheeran.in/cdn/farfuture/NchS8_hsKS0ObxEHbULySoweXVXI5eApdaOx6_eqQC8/1636713792/sites/default/files/inline-images/th-1_2181.jpg)
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிப்பதற்காக, தகுதியான பேராசிரியர்களை கண்டறிந்து தகுதியானவர்களை பட்டியலை தருவதற்கான சர்ச் கமிட்டியை சமீபத்தில் அமைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த சர்ச் கமிட்டியின் தலைவராக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியை நியமித்தார். ஆனால், அவரை உடனடியாக மாற்றப்பட வேண்டும் என போர்க்குரல் எழுப்புகிறார் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புகழ்பெற்ற மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவி ஆகஸ்ட் 2021 முதல் காலியாக உள்ளது. இப்பல்கலைக் கழகத்திற்கு அடுத்த துணைவேந்தரைத் தேர்வு செய்யவுள்ள தேர்வு குழுவுக்கு தமிழக மக்களால் பெரிதும் எதிர்க்கப்படும் பாஜக அரசின் திட்டமான புதிய கல்விக் கொள்கையின் தீவிர ஆதரவாளரான பேராசிரியர் பாலகுருசாமியை ஆளுநர் நியமித்திருப்பது மிகுந்த அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தேடல் குழுவின் சிண்டிகேட் பிரதிநிதியாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராஜேந்திரனும், செனட் பிரதிநிதியாக காமராசர் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பி.மருதமுத்துவும் நியமிக்கப்பட்டனர்.
இந்தத் தேடல் குழுவின் தலைவராக முனைவர் இ.பாலகுருசாமியை ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்துள்ளதாக தெரியவருகிறது. ஒன்றிய பாஜக அரசின் முகவராக உள்ள ஆளுநர், ஏற்கனவே புதிய கல்விக் கொள்கையை உயர்கல்வித் துறையில் நடைமுறைப்படுத்த முயற்சிகளை முன்னெடுத்திடுமாறு, துணை வேந்தர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு, சமூக நீதிக்கெதிரான புதிய கல்விக் கொள்கையை ஒருபோதும் தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்ற முடிவை ஆணித்தரமாக அறிவித்துள்ளது. தமிழக அரசின் கொள்கையை மீறி, புதிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாட்டில் புகுத்திட ஆர்வம்காட்டி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தேடல் குழுவிற்குள் இ.பாலகுருசாமியைப் புகுத்துவது பல்வேறு சந்தேகங்களை உருவாக்குகிறது.
தமிழகப் பல்கலைக் கழகங்களில் முழுத் தகுதியுள்ள சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் துணைவேந்தர் பதவிக்கு நியமிக்கப்படாமல் கடந்த பத்தாண்டுகளாகத் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுவரும் நிலையில் சமூகநீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையின் தீவிர ஆதரவாளரும், ஒன்றிய அரசின் கல்வித் திட்டங்களைப் பொதுவெளியில் தொடர்ந்து ஆதரித்து வருபவருமான இ.பாலகுருசாமியின் நியமனம் மிகுந்த கவலையளிக்கிறது. இவர் மாற்றப்பட்டு இப்பொறுப்பிற்கு, சமூக நீதிக் கொள்கையில் நாட்டமுள்ள தகுதியான ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் " என்று வலியுறுத்துகிறார்.