![Chance of very heavy rain in Tamil Nadu - warning for 5 districts](http://image.nakkheeran.in/cdn/farfuture/dp7ELEKW3vx5ldHgobhrevXGVKTAME_VdFycELvW5oY/1699515686/sites/default/files/inline-images/A39_6.jpg)
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வரும் நிலையில், இன்று தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிகப் பலத்த மழை பொழியும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, நீலகிரி, கோவை ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் மிகப் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், திருப்பூர், நாகை, ஈரோடு, தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 16 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை தமிழகத்தில் மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![Chance of very heavy rain in Tamil Nadu - warning for 5 districts](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZvRjz2rwIgaybBRmDctEUz4V1ypvRk1_g-kLb0uMjqs/1699515718/sites/default/files/inline-images/a2205_0.jpg)
நீலகிரியில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த கனமழை காரணமாகக் கீழ் கோத்தகிரியில் கடந்த 24 மணி நேரத்தில் 23 சென்டிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மிக மிகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அங்கு சில இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டு கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களிலும் பெய்த கனமழையால் பல இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.