மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கான சேர்க்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில், அவர்களுடைய அசல் சான்றிதழ்கள் இன்று சரிபார்க்கும் பணி துவங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதில், திருச்சி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகள் சென்று தங்களுடைய சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பித்து சரிபார்த்து வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவமனை டீன் வனிதா கூறுகையில், “தற்போது வந்திருக்கக்கூடிய மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு மாணவர்கள் எந்த கல்லூரியில் சேர வேண்டும் என்பது குறித்த தகவல்களை பின்னர் அறிவிப்பார்கள். இன்று சான்றிதழ் சரிபார்க்கும் பணி மட்டும் நடைபெற்று வருகிறது. காலை 10 மணி முதல் நடந்துவருகிறது. இந்தப் பணியில் மருத்துவத் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு சான்றிதழ்களை சரிபார்த்து வருகின்றனர். அதேபோல் 7.5 இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 10 மாணவர்கள் தற்போது கல்லூரியில் இணைந்துள்ளனர். மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவரும் தற்போது இணைந்துள்ளார்” என அவர் தெரிவித்தார்.