எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் ரூபாய் 4,800 கோடி டெண்டர் முறைகேடு நடைபெற்றிருந்ததாகவும், டெண்டர்களை நெருங்கிய உறவினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கி முறைகேடு செய்ததாகவும் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன், எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையால் அரசு ஒப்பந்தங்களுக்கு அதிக விலை தர நேர்ந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில், டெண்டர் முறைகேடு தொடர்பாக, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், டெண்டர் முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, சி.பி.ஐ. விசாரணைக்கு தடைகோரி டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (03/08/2022) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். அத்துடன், எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.
எந்த பிரச்சனையும் இல்லாத சுதந்திரமான விசாரணை வேண்டும்; சி.பி.ஐ. விசாரணையாகத்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை என ஆர்.எஸ்.பாரதி தரப்பில் வாதிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.