Skip to main content

எம்.ஜி.ஆரின் ஆத்மாதான் விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும்... எம்.ஜி.ஆர். சிலையிடம் மனு கொடுத்த விவசாயிகள்...

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

farmers gave petition to MGR Statue


மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்திருக்கும் நிலையில், மத்திய அரசானது தான் கொண்டு வந்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெற முடியாது என்று தன்னுடைய உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. 

 

விவசாயிகள், டெல்லியில் டிராக்டர் அணி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தமிழக விவசாயிகளும் அவர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து இங்கு பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று (21.01.2021) திருச்சி நீதிமன்றம் அருகில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலையிடம், ‘விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். கடந்த 15 நாட்களில் பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயும், மற்ற தானியங்களுக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவை அளித்தனர். 

 

farmers gave petition to MGR Statue


அப்போது விவசாயிகள் கூறுகையில், “உயிரோடு இருக்கக்கூடிய அனைத்து அதிகாரிகளையும் அரசு துறை சார்ந்த அனைவரையும் சந்தித்து நாங்கள் கொடுக்காத மனுக்கள் இல்லை. எம்.ஜி.ஆரின் ஆத்மாவாது விவசாயிகளின் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் என்று கூறி அவருடைய காலில் விழுந்து மனுக்களைக் கொடுக்கிறோம்” என்று கூறினர். அனைவரும் எம்.ஜி.ஆர். சிலையிடம் மனு கொடுக்க முயற்சித்த நிலையில் காவல்துறை அனுமதிக்காததால் விவசாயிகள் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சார்ந்த செய்திகள்