கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகில் உள்ளது எழுமேடு அகரம். இந்த பகுதியை சேர்ந்தவர் இருபத்தி ஆறு வயது லாரி டிரைவர் வடிவேல். இவருக்கு திருமணமாகி மனைவி மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வடிவேல் தனது தொழில் சம்பந்தமாக பல்வேறு மாநிலங்களுக்கு லாரி ஓட்டி சென்று சம்பாதித்து மனைவி பிள்ளைகளை காப்பாற்றி உள்ளார். இதன் காரணமாக அவர் பல நேரங்களில் வீட்டில் இருப்பதில்லை. கணவர் இல்லாத காரணத்தினால் மல்லிகா அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே சென்று வருவது வழக்கம். அப்படி சென்று வரும்போது அதே பகுதியை சேர்ந்த 22 வயது சசிகுமார் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு இவர்கள் நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
மல்லிகா சசிகுமாருடன் அடிக்கடி வெளியே சென்று தங்களது உறவை வளர்த்து வந்துள்ளனர். சசிகுமார் புதுச்சேரி மாநிலத்திலுள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் மல்லிகா சசிகுமார் இருவருக்குமான உறவு அவரது கணவன் வடிவேலுக்கு தெரிய வருகிறது. இதையடுத்து வடிவேல், இருவரின் தகாத உறவு முறையை கைவிடுமாறு கண்டித்துள்ளார். இதனால் வடிவேலு மீது சசிகுமாருக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் காதலுக்கு வில்லனாக எதிர்த்து வரும் வடிவேலு மீது சசிகுமார் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.
இதையடுத்து வடிவேலுவை தீர்த்துக் கட்டிவிட்டால் தங்கள் காதல் எந்தவித இடையூறுமின்றி தொடரும் என்று முடிவு செய்தார் சசிகுமார். சம்பவத்தன்று தனது நண்பரான கீழ் குமாரமங்கலத்தை சேர்ந்த சிவனேசன் என்பவருடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். அவர்கள் திட்டமிட்டபடி சிவனேசன் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி சென்றுள்ளார். பின்னர் ஓட்டலில் வேலை செய்துகொண்டிருந்த சசிகுமார் குறிப்பிட்ட நேரம் மட்டும் வெளியே சென்று வருவதற்கு ஓட்டல் உரிமையாளரிடம் அனுமதி கேட்டுள்ளார். அப்படி அனுமதி பெற்று வெளியே வந்த சசிகுமாரும் சிவனேசனும் சேர்ந்து நெல்லிக்குப்பம் வந்தனர்.
வாழப்பட்டு பெட்ரோல் பங்க் அருகே சாலை வழியாக வடிவேலு வருவார் என்பதை அறிந்து மறைந்திருந்து காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடி வடிவேல் இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்தனர். அவரை வழிமறித்து தடுத்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு சசிகுமார், சிவனேசன் ஆகிய இருவரும் தப்பித்தனர். அதன்பின்னர் சசிகுமாரும் புதுச்சேரி ஹோட்டலுக்கு எதுவும் நடவாதது போல் வேலைக்கு சென்று விட்டார். பலத்த காயமடைந்த வடிவேலுவை அவ்வழியே வந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார் வடிவேலு.
இதுகுறித்து வடிவேலுவின் தாயார் தமிழரசி அளித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்கு பதிவு செய்து வடிவேலுவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். போலீஸ் விசாரித்த போது சசிகுமார் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து தன்னை அரிவாளால் தாக்கி கத்தியால் குத்தியதை வடிவேலு தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் புதுச்சேரி ஓட்டலுக்குச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது ஹோட்டலில் வேலை செய்யும் ஊழியர்கள் சம்பவத்தன்று சசிகுமார் ஹோட்டல் முதலாளியிடம் அனுமதி பெற்று வெளியே சென்று வந்ததை உறுதி செய்தனர்.
சிறிது நேரத்தில் அங்கு வேலைக்கு வந்த சசிகுமாரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது அவரிடம் விசாரித்த போது தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்துள்ளார். ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் வடிவேலுவை அரிவாளால் வெட்டியதை சசிகுமார் ஒப்புக்கொண்டார். பின்னர் சசிகுமாரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். வடிவேலுவை கொலைசெய்யும் முயற்சியில் சசிகுமாருக்கு துணையாக இருந்த அவரது நண்பர் சிவனேசனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.