![Case for protecting the natural resources of the mountains! National Green Tribunal to be approached](http://image.nakkheeran.in/cdn/farfuture/9M8jOgHDTOLi8G2JX9qcoxTh2lwUPo78o26SNyX2ddo/1591195798/sites/default/files/inline-images/qwewqw.jpg)
மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் இயற்கை வளங்களை பாதுகாத்திட நிரந்தர குழு அமைக்கக்கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகும்படி உத்தரவிட்டுள்ளது.
மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடர்களில் தொடர்ந்து மரங்கள் வெட்டப்படுவதால், அவற்றை பாதுகாக்க நிரந்தரக் குழு அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், கன்னியாகுமரி முதல் குஜராத் வரை மேற்கு தொடர்ச்சி மலை சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் சதுர கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. சுந்தரவனக்காடுகள் முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு தொடர்ச்சி மலை பரந்து விரிந்திருக்கிறது. இந்த மலைத் தொடர்களில் ஆயிரக்கணக்கில் அரிய வகை மரங்கள், பல்லுயிர்கள் இருக்கின்றன.
மேலும், தமிழக அரசின் வனப் பாதுகாப்பு மற்றும் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, சிலர் இந்த மலைத் தொடர்களில் இருந்து அரிய வகை மரங்களை வெட்டி எடுப்பதால், பல்லுயிர்கள் மறைந்து போகின்றன. இதனால், மலைத் தொடர்கள் தரிசு நிலங்களாக மாறுகின்றன. இந்த மலைத் தொடர்களின் இயற்கை வளங்களையும், பல்லுயிர்களையும் காப்பாற்ற சுற்றுச்சூழல் அறிஞர் மாதவ் காட்கில் மற்றும் விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் ஆகியோரின் பரிந்துரைகளை பின்பற்றி நிரந்தர குழு அமைக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்காக, பசுமை தீர்ப்பாயத்தைதான் அணுக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.