![Cannabis supply by Courier parcel](http://image.nakkheeran.in/cdn/farfuture/NdWSMLXYW8XYtypAg3fOEi35-XdvLRraUmdlSy8LqsQ/1655721840/sites/default/files/inline-images/th_2612.jpg)
தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வந்த நிலையில், பள்ளி கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சம்பவம் பொது மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கஞ்சாவைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திர பாபு கஞ்சா அதிரடி வேட்டைக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து மாவட்டம் முமுவதும் காவல் துறையினா் தினந்தோறும் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்த போது பைக்கில் வந்த அனந்த நகரை சோ்ந்த ஜெரீஸ் (24), எறும்புகாடு பகுதியை சோ்ந்த வினோத் (28), மேலராமன்புதூரை சோ்ந்த பிரிஜின் பிரகாஷ் (22) ஆகிய 3 பேரைப் பிடித்து சோதனை செய்தனர். அதில் அவா்களிடம் 2 கொரியா் பார்சல் இருந்தது தெரியவந்தது.
பின்னா் அந்த கொர்யா் பார்சலை பிரித்து சோதனை செய்ததில் அதில் 1 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 3 பேரையும் கைது செய்த போலீசார் உடனே மாவட்ட எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் தலைமையில் நாகா்கோவிலில் உள்ள அந்த கொரியா் நிறுவனத்திற்கு சென்று சோதனை செய்தனா். அப்போது அடிக்கடி இதே போல் ஏராளமான பார்சல்கள் ஆந்திரா, பெங்களூா் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து வருகிறது. அதற்குள் கஞ்சா இருப்பது எங்களுக்குத் தெரியாது என்று ஊழியா்கள் கூறினார்கள்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அந்த 3 பேரிடம் விசாரித்த போது, தமிழகத்தில் போலீசாரின் அதிரடி சோதனையால் நேரிடையாக கஞ்சா சப்ளை செய்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் தனியார் கொரியா் மூலம் போலி முகவரியில் இருந்து அனுப்பி கஞ்சாவை உள்ளூருக்குள் வரவழைத்து சிறு, சிறு பொட்டலங்களாக கட்டி விநியோகம் செய்கிறோம் என்றனா்.
பின்னா் போலீசார் அவா்களிடமிருந்து கஞ்சா எடை மிஷின் மற்றும் 3 பைக்குகளையும் கைப்பற்றி அவர்களையும் சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.