கீழ் புவனகிரியில் தனியார் வங்கி ஒன்றின் மேல்தளத்தில் நிதி நிறுவனம் ஒன்றும், அதற்கு அருகில் ஜிஎஸ்டி கணக்குகளை பார்க்கும் தனிநபர் அலுவலகம் ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் கடந்த 1-ஆம் தேதி மதியம் இந்தப் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் புவனகிரி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஜிஎஸ்டி கணக்குகளை பார்க்கும் அலுவலகத்தின் மாடிப்படி அருகே நிர்வாணமான நிலையில் பெண் சடலம் (வயது 35 மதிக்கத்தக்க) கிடந்தது.
சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்கள் மற்றும் கைரேகைகளை சேகரித்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்துபோன பெண் புதுச்சேரி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சத்யா ( 35) என்பது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் ஆய்வு செய்ததில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அந்த பெண், அந்த இடத்திற்கு வருவதும், முதல் மாடியில் இருந்து ஒருவர் வந்து அந்த பெண்ணை அழைத்துச் செல்வதும் பதிவாகியிருந்தது. பின்னர் இரவு 11 மணிக்கு மேல் அந்த வாலிபர் மட்டும் தனியே வெளியே செல்வதும் பதிவாகியுள்ளது.
இதைவைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில்,அந்த நபர் ஜிஎஸ்டி கணக்கு பார்க்கும் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் எனத் தெரியவந்தது. அவரைத் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. அவர்தான் இந்தப் பெண்ணை கொலை செய்திருக்கலாம் என்றும், முறையற்ற தொடர்பு காரணமாக கொலை நடந்ததா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய போது கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த தச்சூர் சக்திவிளாகத்தை சேர்ந்த முரசொலிமாறனுடன் பழக்கம் ஏற்பட்டிருந்தது. தற்போது மாறன் புவனகிரி அடுத்த ஆய்புரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி ஆடிட்டர் அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக பணியாற்றிய நிலையில், சத்யாவுடன் அவர் தொடர்பில் இருந்ததும் அம்பலமானது.
சத்யாவின் கணவர் வெளிநாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. மாறனின் அழைப்பின் பேரில் சத்யா அங்கு வந்திருக்கலாம் இருவரும் தனிமையில் இருந்தபோது தகராறு ஏற்பட்டு கொலையில் முடிந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே சடலம் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட அந்த ஊழியர் தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். அவர் பிடிபட்டால்தான் இதற்கான உண்மைக் காரணம் தெரியவரும்.
புவனகிரி நகரின் மையப்பகுதியில் உள்ள தனியார் அலுவலகத்திற்கு அருகில் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.