புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து கடந்த 17ஆம் தேதி 118 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அதில் ஒரு படகில் ராஜ்கிரண், சுகந்தன், ஜோசப் ஆகியோரும் சென்றுள்ளனர். 18ஆம் தேதி அதிகாலை ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இவர்களின் படகு நோக்கி வேகமாக வந்த இலங்கை கடற்படை கப்பல், மீனவர்களின் படகில் மோதி மூழ்கடித்தது. படகில் இருந்த மீனவர்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் சுகந்தன், ஜோசப் ஆகிய இரு மீனவர்களை மீட்டு கைது செய்த கடற்படையினர் காங்கேசன்துறைக்கு கொண்டு சென்றனர்.
ராஜ்கிரண் நிலை என்னவானது என்றே தெரியாமல் போனது. அன்று மாலை ராஜ்கிரண் உடல் கண்டெடுக்கப்பட்டதாக முதலில் அறிவித்த இலங்கை அரசு, சிலமணி நேரத்தில் அந்த தகவலை திரும்பப் பெற்றதால் மீனவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று (21.10.2021) ராஜ்கிரண் உடல் மீட்கப்பட்டதாக படங்கள் வெளியானது. இலங்கை கடற்படை கப்பலால் மோதி கொல்லப்பட்ட மீனவர் ராஜ்கிரண் உடலையும் கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோட்டைப்பட்டினம் மீனவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இன்று ராஜ்கிரண் உடலை இலங்கை கடற்படை இந்திய கடற்படையிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் உடலை வாங்கி வர மீனவர்கள் தயாராக இருக்கும்படியும் கூறியிருந்தனர். ராஜ்கிரண் உடல் மற்றும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் கரைக்கு வரும் வரை போராட்டம் தொடரும் என்றும் மீனவர்களின் போராட்டக்குழு அறிவித்திருந்தது. இன்று அதிகாலை ராஜ்கிரண் உடலை வாங்க 2 படகுகளில் கடலுக்குள் செல்ல மீனவர்கள் தயாராக இருந்த நிலையில், திடீரென ராஜ்கிரண் உடல் வாங்க இப்போது வர வேண்டாம், அடுத்த தகவல் வந்த பிறகு வரலாம் என்று கூறியுள்ளனர். இதனால் இன்றும் உடல் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் 4வது நாளாக மீனவர்கள் போராட்டம் தொடர்கிறது.