
ஊதிய உயர்வு, பணி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் நாளை முதல் போராட்டம் நடத்த உள்ளதாக நேற்று முன்தினம் அறிவித்திருந்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக தமிழகப் போக்குவரத்துக் கழகம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்துச் சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எனவே, போக்குவரத்து ஊழியர்கள் நாளை அறிவித்துள்ள போராட்ட அறிவிப்பு சட்ட விரோதமாகும். நாளை அனைவரும் பணிக்கு வரவேண்டும், இல்லையென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தை முடியும்வரை இடைக்கால நிவாரணமாக ரூ.1,000 வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதனை ஏற்று போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.