புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள ஒரு அரசு பேருந்து ஓட்டுநர் நேற்று மதியம் செல்போனில் வாட்ஸ் அப்பில் சாட்டிங்க செய்து கொண்டே சுமார் 20 கி.மீ வரை பேருந்தை ஒற்றைக் கையால் ஓட்டிச் சென்றார் என்பதை படத்துடன் நக்கீரன் இணையத்தில் நேற்று இரவு செய்தியாக வெளியிட்டிருந்தோம். அதே போல நக்கீரன் வெப் டி.வி யில் வீடியோ வெளியிட்டிருந்தோம்.
இந்த செய்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் உமாமகேஸ்வரி உடனடியாக புதுக்கோட்டை மண்டலத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் மீது பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். மேலும் பயணிகள் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேருந்து ஓட்டுநர்கள் பணி நேரத்தில் கண்டிப்பாக செல்போன்கள் பயன்படுத்தக் கூடாது என்றும், இதனை மீறி செல்போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். மேலும் இது போன்ற நிகழ்வுகள் நடெபெறாமல் இருக்க தொடர்புடைய அலுவலர்கள் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவையடுத்து செல்போனில் சாட்டிங் செய்து கொண்டே பேருந்தை ஓட்டிய பட்டுக்கோட்டை கிளையை சேர்ந்த மூக்கையா என்ற ஓட்டுநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதே போல கடந்த வாரத்திலும் இதே பட்டுக்கோட்டை கிளையை சேர்ந்த ஜாகிர் உசேன் என்ற ஓட்டுநர் செல்போனில் பேசிக் கொண்டே பேருந்தை ஓட்டியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்படி அடிக்கடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் கூட ஓட்டுநர்கள் பயணிகளின் உயிர்கள் மீது அக்கறை இல்லாமல் செல்போனை பயன்படுத்துவது வருத்தமளிக்கிறது.
இந்த தகவலை முதலில் வெளிக் கொண்டு வந்த நக்கீரன் இணையம், மற்றும் நக்கீரன் வெப் டி.விக்கு பயணிகள், பொதுமக்கள் பாராட்டினார்கள்.