ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் வேகம் அதிகரித்துள்ளது. முன்னதாக மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த புயல், தற்போது 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அதே சமயம் ஃபெஞ்சல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி மாமல்லபுரம்- காரைக்கால் இடையே ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அதோடு அங்குள்ள கள நிலவரங்களைக் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கே.என்.நேரு, தலைமைச் செயலாளர் முருகாணந்தம், முதன்மை செயலாளர் அமுதா, சென்னை மாநகராட்சி மேயர் குமரகுருபரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாகப் பெய்து வரும் கனமழையால் சென்னை விமான நிலையம் பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஓடுபாதை முழுவதிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் விமானத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு விமான சேவை ரத்து செய்யப்பட்டன. பல்வேறு விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தவித்து வருகின்றனர்.