நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை, பெரிதும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், இதனை ஒடுக்கும் நடவடிக்கையாக, போதைப்பொருள் தடுப்பு வேட்டையில், தமிழ்நாடு போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால், ஆங்காங்கே கைது சம்பவங்களும், போதைப் பொருட்கள் பறிமுதல்களும், நடந்து வருகிறது.
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் கஞ்சா வியாபாரத்தைத் தடுக்க அம்மாவட்டக் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அங்குள்ள கஞ்சா விற்பனை கும்பலால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில், கன்னியாகுமரி சுனாமி காலனியைச் சேர்ந்தவர் ஆக்னல். 26 வயதான இவர், தனது நண்பரான டைசன் என்பவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், அவர்களுக்கு எதிராக அதே காலனியைச் சேர்ந்த ஜெப்ரின் என்பவரும் தனது நண்பர்களான கான்ஸ்டன், ராபின் ஆகியோருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கிடையில், கடந்த சில நாட்களாக டைசன் மற்றும் ஜெப்ரின் தரப்பினருக்கு இடையே கஞ்சா விற்பனை செய்வதில் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
மேலும், கஞ்சா விற்ற பணத்தில் கொடுக்கல், வாங்கல் தொடர்பான பிரச்சனைகளும் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் டைசன் மற்றும் ஜெப்ரின் தரப்பினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது, நாளடைவில் கைகலப்பாகவும் மாறியுள்ளது. இந்த இரண்டு கஞ்சா கும்பலும் தாங்கள் சந்திக்கும் இடமெல்லாம் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். இத்தகைய சூழலில், கடந்த 22 ஆம் தேதியன்று கஞ்சா போதையில் இருந்த ஜெப்ரின், தனது இரண்டு நண்பர்களுடன் டூவீலரில் அங்கும் இங்குமாய்ச் சுற்றிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்த்தரப்பைச் சேர்ந்த ஆக்னல் என்பவருடன் கஞ்சா விற்பனை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயம், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில், தலைக்கேறிய போதையில் இருந்த ஜெப்ரின், ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆக்னலை சரமாரியாக வெட்டியுள்ளார்.
அதன்பிறகு, தனது டூவீலரில் தப்பிவந்த ஜெப்ரின் தள்ளாடிக்கொண்டே விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு வந்துள்ளார். அந்த நேரம், கன்னியாகுமரியைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவர், திருச்சியில் உள்ள தன்னுடைய அம்மாவிற்குப் பணம் அனுப்புவதற்காக அங்கு வந்துள்ளார். இதையடுத்து, தலைக்கேறிய போதையில் இருந்த ஜெப்ரின் தனது டூவீலரோடு ஏடிஎம் வாசலிலேயே விழுந்துள்ளார். இதற்கிடையில், அங்கிருந்த மோகன்தாஸ் கீழே விழுந்த ஜெப்ரினுக்கு உதவி செய்வதற்காக வந்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில், ஸ்பாட்டுக்கு வந்த ஜெப்ரினின் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து சம்பந்தமில்லாமல் மோகன்தாஸையும் அரிவாளால் வெட்டிவிட்டு, அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதையடுத்து, படுகாயமடைந்த ஆக்னல் மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார் மருத்துவமனைக்கு நேரில் சென்று படுகாயமடைந்த இருவரிடமும் விசாரணை மேற்கொண்டார். அதன்பிறகு, குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். இத்தகைய சூழலில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆக்னல் மற்றும் மோகன்தாஸ் ஆகியோரைத் தாக்குவதற்காக, ஜெப்ரின் அந்த மருத்துவமனைக்குள்ளேயே புகுந்துள்ளார். அந்த சமயம், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் ஜெப்ரினைக் கையும் களவுமாகப் பிடித்தனர். ஆனால் தப்பி ஓட முயன்ற போது அவர் தவறி கீழே விழுந்து காயமடைந்தார். அப்போது, கஞ்சா போதையில் போலீசாரிடம் திமிறிக்கொண்டிருந்த ஜெப்ரின், "இங்க நான் மட்டும்தான்.. இந்த ஜெயிலுக்குலாம் போக முடியாது. என்னோட வக்கீல் இங்க வந்தே ஆகணும். இன்னைக்கு நீங்களா நாங்களானு பாப்போம்" என போலீசாருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.
இதையடுத்து, சிகிச்சைக்குப் பிறகு ஜெப்ரினைக் கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஜெப்ரினின் இரண்டு நண்பர்களைத் தேடிவந்த நிலையில், அதில் ராபின் என்பவரைப் போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து மற்றொருவரைப் போலீசார் தேடி வருகின்றனர். தற்போது கஞ்சா கும்பலால் கன்னியாகுமரியில் நடைபெற்றுவரும் குற்றச் செயல்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.