பூனைகளைப் பாதுகாத்து வளர்த்து வரும் குடில் பூனை வெல்ஃபேர் உரிமையாளர் தாரணியை நக்கீரன் 360 சேனல் வாயிலாகச் சந்தித்தோம். அப்போது அவர் பூனை வளர்ப்பதைப் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
'சின்ன வயதிலிருந்து எனக்கு பூனை மிகவும் பிடிக்கும். முதலில் நான் ஒரே ஒரு பூனை வைத்திருந்தேன். அந்த பூனையைப் பாதுகாக்க ஒருவரிடம் கொடுத்தபோது அவர்கள் என்னுடைய பூனையைச் சரியாகப் பார்த்துக்கொள்ளவில்லை. சில நாட்களுக்குப் பிறகு நான் சென்று கொண்டிருந்த வேலையிலிருந்து விலகவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் பிறகு நான் பூனைகளைப் பாதுகாக்கும் மையத்தை ஏன் உருவாக்கக் கூடாது என்ற எண்ணம் எனக்கு உருவானது. அங்கிருந்து தொடங்கியதுதான் இந்த குடில் பூனை வெல்ஃபேர் இடம்.
இந்த குடில் பூனை பாதுகாப்பு இடத்தின் மூலம் வெளிநாடு அல்லது வெளியூர் செல்பவர்கள் தங்களுடைய பூனையை எங்களிடம் விட்டுவிட்டு போவார்கள். அந்த பூனைகளை உரிமையாளர்கள் வரும் வரை பாதுகாத்து உணவளித்து வருவோம். சாலையோரங்களில் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் நிறையப் பூனைகளை மீட்டெடுத்து நானும் என் கணவரும் வளர்ப்போம். பூனை வளர்க்க ஆசைப்பட்டு யாரவது வந்தால், அந்த பூனையை அவர்களிடம் ஒப்படைத்து விடுவோம். நிறைய பெட் லவ்வர்ஸ் பூனைகள் பாதுகாப்பற்ற சூழலில் வளர்வதைப் பார்த்து கால் செய்து மீட்கச் சொல்வார்கள். சிலர் அவர்களே கேட்டு அந்த பூனையை வளர்க்கத் தொடங்கிவிடுவார்கள்.
எங்களுடைய முதல் பூனை மீட்பு அண்ணா நகரில் நடந்தது. அங்குள்ள ஒரு பங்களா வீட்டில் ஒரு தாய்ப் பூனை நான்கு குட்டிகளைப் போட்டது. அதில் மூன்று குட்டிகளும் இறந்துவிட்டது. தன்னுடைய குட்டியுடன் அந்த தாய்ப் பூனை என்ன செய்வது என்று தவித்து வந்த நிலையில், நானும் என் கணவரும் சேர்ந்து அந்த தாய்ப் பூனையை மீட்டோம். நாய்க்கு ஒருமுறை பிஸ்கட் போட்டால் பழகிவிடும். ஆனால், பூனைகள் எளிதில் மனிதர்களுடன் பழகாது. நான் பூனை வளர்ப்பதால் என்னுடைய கையில் பூனையின் வாசனை வரும். அதனால் எளிதில் என்னுடன் பூனைகள் பழகிவிடும்.
சில நேரங்களில் பூனைகள் தங்களை தற்காத்துக்கொள்ள கடிக்கவும், கீறவும் செய்யும். இருப்பினும் அதுபோன்ற பூனைகளைக் கஷ்டப்பட்டு மீட்டு வளர்ப்போம். சில பூனைகள் காயங்களுடன் இருக்கும். அந்த பூனைகளுக்கு உரிய மருத்துகளைக் கொடுத்து மீட்டெடுப்போம். இந்திய வகை பூனைகளை வளர்ந்தால் அதோடு சேர்ந்து நாமும் சுறுசுறுப்பாக இருப்போம். மற்ற வகை பூனைகள் நம்மையே சோம்பேறியாக மாற்றிவிடும். பூனைகளைப் பொறுத்தவரை வீட்டில் பத்து பேர் இருந்தாலும் யாராவது ஒருவருடைய குணாதிசயங்களை எடுத்துக்கொள்ளும். என் வீட்டில் இருக்கும் எல்லா பூனைகளும் என்னுடைய கணவர் மாதிரிதான் நடந்துகொள்ளும். அவரை நான் எளிதில் கையாள முடிவதால், பூனைகளையும் எளிதில் கையாண்டுவிடுவேன்' என்றார்.