!['3D' footage of Fenchal storm cloud clusters released](http://image.nakkheeran.in/cdn/farfuture/E9UFtX-CBrVOxshMVxUPvyHACH2BUX1fKV2_uOLHaP8/1732941295/sites/default/files/inline-images/fengal-3d-art.jpg)
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் மாமல்லபுரம் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், கடல் அலைகள் 10 அடி உயரம் வரை எழும்புகின்றன.
அதே சமயம் புயல் முன்னெச்சரிக்கையாக சென்னை தியாகராயநகர் ஜி.என். செட்டி ரோடு மேம்பாலம், வேளச்சேரி மேம்பாலம் மற்றும் ராயபுரம் மேம்பாலத்தில் மீண்டும் கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஃபெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு கிழக்கே 180 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (30.11.2024) பிற்பகலில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய சூழலில் தான் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் வேகம் அதிகரித்துள்ளது. முன்னதாக மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த புயல், தற்போது 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அதே சமயம் ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகலில் புயல் கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது இன்று மாலையில் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது. அதன்படி மாமல்லபுரம்- காரைக்கால் இடையே இன்று மாலை ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை ரேடாரில் ‘ஃபெஞ்சல்’ புயல் மேகக் கூட்டங்களின் தற்போதைய (காலை 09.30 மணியளவில்) 3டி படத்தைச் சென்னை வானிலை ஆய்வு மையம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. சுமார் ஒரு நிமிடம் 38 விநாடிகள் ஓடக்கூடிய இந்த காட்சியில் ‘ஃபெஞ்சல்’ புயல் மேகக் கூட்டங்கள் தெளிவாக முப்பரிமாண வடிவத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை ரேடாரில் ‘ஃபெயின்ஜல்’ புயல் மேக கூட்டங்களின் தற்போதைய 3D படம் pic.twitter.com/U14evcK7eU— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 30, 2024