
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மாயா கோகாய்(19). இவரும், ஆரவ் ஹனாய்(21) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும், கடந்த 23ஆம் தேதி பெங்களூரில் இந்திராநகர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 26ஆம் தேதி ஆரவ் ஹனாய் மட்டும் அறையில் இருந்து வெளியேறி சென்ற பிறகு, அந்த அறைக்குள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதில் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள், அந்த அறையை திறந்து பார்த்துள்ளனர். அங்கு மாயா கோகாய் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்து, இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொலை செய்யப்பட்டு கிடந்த மாயா கோகாய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், கடந்த 2 நாட்களாக அந்த அறையில் யாரும் வெளியே செல்லவோ, உள்ளே வரவோ இல்லை என்பது தெரிந்தது. அதன் அடிப்படையில், இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக மாயா கோகாய்யின் காதலனான ஆரவ் ஹனாய் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வந்தனர். அதன்படி, பெங்களூருவின் புறநகர் பகுதியில் இருந்த ஆரவ் ஹனாய்யை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், ஆரவ் ஹனாய் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது. மேலும், லிவ்-இன் உறவில் இருக்க ஹனாய் விரும்பியதாகவும் அதற்கு மாயா மறுத்ததாலும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த ஹனாய், தனது காதலி மாயாவை கொலை செய்துள்ளார் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.