Skip to main content

ஃபெஞ்சல் புயல் - தற்போதைய நிலை என்ன?

Published on 30/11/2024 | Edited on 01/12/2024
Fengal Storm What is the current status?

ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு 190 கி.மீ. தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று (30.11.2024) பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கவுள்ளது. அப்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதோடு 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத்தகைய சூழலில் தான், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.

கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவையைத் தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்  கேட்டுக் கொண்டுள்ளது.

சென்னை மாநகர பேருந்து சேவை வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்படுட்ள்ளது. அதே சமயம் சென்னை மெரினா கடற்கரை சாலை தற்காலிகமாக தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியுரிய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக அப்பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.  கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (30.11.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர், கும்பகோணம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (30.11.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. 

சார்ந்த செய்திகள்