வங்கக்கடலில் தென்மேற்குப் பகுதியில் நிலவும் ஃபெஞ்சல் புயல் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இப்புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தற்போது தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் எனக் கணித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழு மாமல்லபுரத்தில் முகாமிட்டுள்ளனர்.
புயலின் தாக்கத்தால் நேற்றிரவு முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதனால் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக, சென்னை புறநகர் பகுதிகளிலுள்ள நகைக் கடைகள் மூடப்பட்டுள்ளது. மேலும் மோசமான வானிலை காரணமாகவும் மழை நீர் விமான ஓடுபாதையில் தேங்கியதன் காரணமாகவும் தற்காலிகமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது சென்னையில் இன்று திரையரங்கங்கள் இயங்காது எனத் திரையரங்க உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.