ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் வேகம் அதிகரித்துள்ளது. முன்னதாக மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த புயல், தற்போது 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அதே சமயம் ஃபெஞ்சல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி மாமல்லபுரம்- காரைக்கால் இடையே ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அதோடு அங்குள்ள கள நிலவரங்களைக் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கே.என்.நேரு, தலைமைச் செயலாளர் முருகாணந்தம், முதன்மை செயலாளர் அமுதா, சென்னை மாநகராட்சி மேயர் குமரகுருபரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர், “தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு இது குறித்துத் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டது. இது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு கடுமையான மழை பெய்து இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்று இரவு கரையைக் கடக்கும் என்று செய்தி வந்திருக்கிறது.
இந்த நிலையில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் சென்னை மாநகர ஆணையர், காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களைத் தொடர்பு கொண்டு அங்கு உள்ள நிலவரங்களை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டோம். நிவாரண பணிகள் எந்த அளவிற்கு உள்ளது எனத் தெரிந்து கொண்டிருக்கிறோம். நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் அங்குத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இரவு நிச்சயமாக கடும் மழை பெய்யும் காரணத்தால் முழுமையான நடவடிக்கை ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் அந்த மாவட்டத்திற்கு உரியப் பொறுப்பு அமைச்சர்கள் நிவாரண பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது” எனத் தெரிவித்தார்.