தமிழகத்தில் எருதுவிடும் விழா நடத்த கட்டுப்பாடுகள் உள்ளன. அதோடு, பல விதிமுறைகளோடு குறிப்பிட்ட அளவே எருதுவிடும் விழாவுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கரோனாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட கிராமங்களில் விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வீரங்குப்பம் கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது.
போட்டிக்கு முன்னதாக காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, தகுதியான காளைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அந்தக் காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மடக்கிப் பிடிக்க 50க்கும் அதிகமான இளைஞர்கள் களத்தில் இருந்தனர். குறிப்பிட்ட தூரத்தைக் குறைந்த நேரத்தில் ஓடிய காளையைப் பிடிக்க முடியாமல் தோற்றதால், காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காளைகளும் ஆந்திர மாநிலம் சித்தூர், குப்பம் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட காளைகளும் போட்டியில் பங்கேற்று ஓடின.
இதில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த குரும்ப தெரு பகுதியைச் சேர்ந்த ரத்தினசாமி என்பவரின் காளை உரிமையாளருக்கு முதல் பரிசு ரூ.70 ஆயிரமும், இரண்டாம் பரிசு வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவரின் காளை உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசு திருப்பத்தூரை அடுத்த அன்னேறி கிராமத்தைச் சேர்ந்த காளை உரிமையாளருக்கு மூன்றாம் பரிசு ரூ.30 ஆயிரம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.
போட்டியை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் தலைமையில் வருவாய்துறையினர் பங்கேற்றனர். 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.