கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு எஸ்ஐ கோபால் தலைமையில் காவலர்கள் சிலர், சனிக்கிழமை (நவ. 30) இரவு, மோட்டூர் சந்திப்பு அருகே வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த ஒரு வேனை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பராக், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த வாகனத்தில் இருந்த 23.67 லட்சம் ரூபாய் புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. வாகன ஓட்டுநரான விழுப்புரத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (30) என்பவரை கைது செய்தனர்.
வழியில் சுங்கச்சாவடி, மற்றும் வாகனத் தணிக்கை நடத்திய காவல்துறையினரிடம் இருந்து எப்படி போதைப் பொருள்களுடன் மோட்டூர் வரை வர முடிந்தது என்பது குறித்து வாகன ஓட்டுநரிடம் விசாரித்தனர்.
குருபரப்பள்ளி அருகே வந்தபோது அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த வாகனத்தை மடக்கியுள்ளனர். அவர்கள் ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு வாகனத்தைச் செல்ல அனுமதித்துள்ளனர். அதேபோல் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகிலும் காவல்துறையினர் லஞ்சம் பெற்றுக்கொண்டு வாகனத்தை அனுமதித்து இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி பண்டி கங்காதரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவத்தன்று குட்கா வேன் ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்றதாக குருபரப்பள்ளி காவல்நிலையத்தைச் சேர்ந்த 3 காவலர்கள், கிருஷ்ணகிரி காவல்நிலையத்தைச் சேர்ந்த ஒரு காவலர் என மொத்தம் நான்கு காவலர்களை உடனடியாக பணியிடைநீக்கம் செய்து எஸ்பி பண்டி கங்காதர் உத்தரவிட்டார்.
மேலும், புகையிலைப் பொருள்கள் எங்கிருந்து, எந்த இடத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது?, இதன் பின்னணியில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.