இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
பல்வேறு மாநிலங்களில் கரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா பரவல் இரண்டாம் அலையாகச் சொல்லப்படுகிறது. இதில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், விளையாட்டுப் பிரபலங்கள் உள்ளிட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளின் வேட்பாளருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான துரைமுருகனுக்கு செய்யப்பட்ட கரோனா மருத்துவப் பரிசோதனையில், கடந்த ஏப்ரல் 8- ஆம் தேதி அன்று அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து, துரைமுருகன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை குறித்து ரேலா மருத்துவமனை நிர்வாகம் இன்று (12/04/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனின் உடல்நிலை சீராக உள்ளது. கவலைப்படும் வகையில் துரைமுருகன் உடல்நிலை இல்லை; மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.