சில நாட்களுக்கு முன் மதுரையின் முக்கிய இடங்களில் மெகா போஸ்டர் ஒன்றை ஒட்டியிருந்தனர். அந்தப் போஸ்டரில் ‘செத்த கெழவன் எழுதிவெச்ச ஒத்த சொத்து வீரமடா’ என்ற வாசகம் கொட்டை எழுத்துக்களில் இருந்தன. அந்த வரியை எழுதியவர் ‘வைரமுத்து’ என்று குறிப்பிட்டிருந்தனர். முதியவர் ஒருவரின் படத்தைப் போட்டு இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் என்று அச்சிட்டிருந்த அந்தப் போஸ்டரில், அந்த முதியவரின் பெயர் ஏனோ இடம்பெறவில்லை.

‘அவர் யாராக இருக்கும்?’ என்று மனதில் அசைபோட்டபடியே அந்தப் போஸ்டரைக் கவனித்த வெளியூர்க்காரர்கள் அனேகம் பேர் இருப்பார்கள். இன்றோ, அந்தப் போஸ்டரில் இருந்த பெரியவரின் முகத்தையும், வீரமடா என்ற வார்த்தையையும் யாரோ கிழித்திருந்தனர். ஆம். போஸ்டரில் பறைசாற்றப்பட்ட வீரம், யாரோ சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதை இச்செயல் உணர்த்துகிறது.
யார் அந்த முதியவர்? மதுரைக்காரர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் பெயர் நல்லகண்ணு சேர்வை. ‘மதுரை மண்ணின் அழிக்க முடியாத அடையாளம் மாவீரன் ஐயா நல்லகண்ணு சேர்வை’ என்று ஒரு சமூகத்தினரால் அவர் கொண்டாடப்படுகிறார். மாவீரன் என்ற பட்டம் நல்லகண்ணு சேர்வைக்குக் கிடைத்த பின்னணியைப் பார்ப்போம்.

‘வீரதீர பராக்கிரமம்’ நிறைந்தவராகவும், முதுமைக் காலத்தில் ஆன்மிக நாட்டம் கொண்டவராகவும் வாழ்ந்திருக்கிறார் நல்லகண்ணு சேர்வை. பருத்தி வீரன் என்ற பெயரில் சினிமா ஒன்று வந்ததல்லவா! நிஜ பருத்தி வீரன் நல்லகண்ணு சேர்வை வீட்டில் வேலை பார்த்தவராம். ரஜினி நடிப்பில் பேட்ட வெளியானது அல்லவா! அந்தக் காளி கதாபாத்திரத்தை யாரை மனதில் நிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கினார் தெரியுமா? நெல்பேட்டை சீனி என்பவர் மிகப்பெரிய தாதாவாக மதுரையில் வலம் வந்தவர். தற்போது, மதுரையைக் கலக்கிக்கொண்டிருக்கும் அத்தனை தாதாக்களும் நெல்பேட்டை சீனியின் சிஷ்யர்கள்தான்.

நெல்பேட்டையில் இருந்து ‘பேட்ட’–ஐ உருவி ரஜினி படத்தின் தலைப்பாக வைத்தார் மதுரைக்காரரான கார்த்திக் சுப்புராஜ். பேட்ட சினிமாவில் நெல்பேட்டை சீனி வாழ்க்கையோடு தொடர்புடைய சில சம்பவங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அப்பேர்ப்பட்ட நெல்பேட்டை சீனியும்கூட, நல்லகண்ணு சேர்வையின் வார்ப்புதான். எம்.ஜி.ஆர். நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவராது என்று அப்போது சவால் விட்டார் மேயர் முத்து. எம்.ஜி.ஆரையே எதிர்த்த முத்துவின் தைரியத்துக்கும் துணிச்சலுக்கும் பின்னால் இருந்தவர் நல்லகண்ணு சேர்வை என்று நிறையப் பேசுகிறார்கள் மதுரைவாசிகள்.


வித்தியாசமான வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டிக் கலக்குவதில் மதுரைக்காரர்களை யாரும் அடித்துக்கொள்ள முடியாது. இத்தனை வீரதீர பின்னணி கொண்ட நல்லகண்ணு சேர்வைக்கு போஸ்டர் ஒட்டாமல் இருப்பார்களா? ஆனாலும், இதுபோன்ற போஸ்டர்களுக்கு எதிர்ப்பும் இருக்கவே செய்கிறது. ‘நீ வீரன் என்றால் நான் கோழையா?’ என்ற கோபம்தான் போஸ்டர் கிழிப்புக்குக் காரணமாக இருக்கிறது.
போஸ்டரை சீரியஸாக எடுத்துக்கொள்வதெல்லாம் தமிழகத்தில் சகஜமானதுதான்!