Skip to main content

“இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது காலை உணவுத் திட்டம்” - தெலங்கானா அரசு அதிகாரிகள்

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

Breakfast Plan Leads India Telangana Govt

 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 1543 பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு திட்டம் தொடங்கப்பட்டது. அடுத்த கட்டமாக ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,008 பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின்  விரிவுபடுத்தினார்.

 

இதைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்திலும் செயல்படுத்த தெலங்கானா மாநில அரசு ஆர்வம் தெரிவித்துள்ளது. அதற்காக தமிழ்நாடு அரசை தொடர்பு கொண்டு தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நேரில் வந்து பார்வையிட அம்மாநில உயர் அலுவலர்கள் ஆர்வம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து தெலங்கானா மாநில அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் முதலமைச்சரின் தமிழ்நாடு காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட தெலங்கானாவிலிருந்து மூத்த அரசு அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர்.

 

இந்நிலையில் சென்னை ராயபுரம் மாநகராட்சி பள்ளிக் கட்டடத்தில் செயல்பட்டு வரும் காலை உணவு தயார் செய்யும் மைய சமையல் கூடத்தை இக்குழுவினர் பார்வையிட்டனர். அங்கு சமையல் பொருட்கள் பெறப்படும் விதம், பணியாளர்கள் பணியாற்றும் தன்மை, சுகாதாரமாக உணவு தயாரிக்கப்படும் முறை தரப்பரிசோதனைகள் செய்யப்படும் விதம். தயாரிக்கப்பட்ட உணவு வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் முறை, வாராந்திர உணவு அட்டவணை முதலான ஒவ்வொன்றையும் பற்றி பணியாளர்களோடும் நம் மாநில அலுவலர்களோடும் உரையாடி அறிந்துகொண்டனர். காலை ஏழு மணிக்கு பார்வையிடத் தொடங்கிய தெலங்கானா குழுவினர் எட்டு மணிக்கு மைய சமையல் கூடத்திலிருந்து புறப்பட்டு அருகில் இருக்கும் ஆரத்தூண் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி உருது தொடக்கப் பள்ளிக்குச் சென்றனர். அங்கே மாணவர்களுக்கு உணவு எவ்விதம் வழங்கப்படுகிறது என்பதைப் பார்வையிட்டு மாணவர்களோடு உரையாடி மாணவர்களின் கருத்துகளையும் அறிந்துகொண்டனர். அதன் பின்னர் திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குச் சென்ற குழுவினர் அங்கே கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் பள்ளிகளில் இந்தத் திட்டம் எப்படி சீரிய முறையில் செயல்படுத்தப்படுகிறது என்பதையும் நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சவால்களை தமிழ்நாடு அரசு எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதையும் அரசு அலுவலர்களிடமும் ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் உரையாடி தெரிந்துகொண்டனர்.

 

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் க. இளம்பகவத் இ.ஆ.ப, தெலங்கானா மாநில அரசு அதிகாரிகள் குழுவோடு உடன் சென்று, அவர்களுக்கு வேண்டிய தகவல்களைத் தந்து இத்திட்ட செயல்பாடுகளையும் விளக்கினார். சமூகநலத்துறை கூடுதல் ஆணையர் கார்த்திகா, சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், திருவள்ளுவர் கூடுதல் ஆட்சியர் சுகபுத்திரா ஆகியோர் இந்த ஆய்வில் பங்கு பெற்றனர். திட்டத்தின் செயல்பாடுகளை நேரில் கண்ட தெலங்கானா மாநிலத்தின் அரசு அதிகாரிகள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை பற்றியும் அது செயல்படுத்தப்படும் விதம் குறித்தும் பாராட்டினர். அப்போது தெலங்கானா மாநில அரசு அதிகாரிகள் “இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” என தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்