முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் அமல்படுத்தாமல் இருப்பது சட்டவிரோதம் என அறிவிக்க கோரி நளினி தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ஆம் தேதி ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த பரிந்துரை மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாகச் சிறையில் அடைத்து வைத்திருக்கப்பட்டதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஆளுநரின் நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீறி கவர்னர் செயல்படுவதாகவும் நளினி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மாருராம் என்பவரது வழக்கில் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராகச் செயல்படுவதாகவும், எனவே அமைச்சரவையின் முடிவை ஆளுநர் செயல்படுத்தாமல் இருப்பது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டிருந்தால் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பேனர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையைத் தசரா விடுமுறைக்குப் பின் ஒத்திவைத்துள்ளனர்.