கர்நாடக அமைச்சரின் பேச்சுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று காலை நடைபெற்ற தருமபுரி மாவட்ட நலத்திட்ட விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் " ஓகேனக்கல் கூட்டு குடிநீர் 2" திட்டம் துவங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு கர்நாடக நீர்வள அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்து இன்று கருத்து தெரிவித்திருந்தார். அதில் நாங்கள் இந்த திட்டத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம். நிச்சயம் இந்த திட்டத்திற்கு எங்களின் எதிர்ப்பை பதிவு செய்வோம் என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, " கர்நாடக அமைச்சரின் பேச்சு பொறுப்பில்லாத ஒன்று, நிச்சயம் இதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குடிநீர் தேவைக்கு தண்ணீர் தரமாட்டோம் என்பது எவ்வித மனிதாபிமானம். காவிரியில் இருந்து 11 டிம்எசி தண்ணீரை குடிநீருக்கு எடுத்துக்கொள்ள காவிரி நதிநீர் அணையம் அனுமதி வழங்கியுள்ளது. நாட்டின் நீர்வளக் கொள்கையின் படி குடிநீர் தேவைக்குத்தான் முதலிடம் தரப்பட்டுள்ளது. எனவே இரண்டாவது ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்" என்றார்.