புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் வேங்கை வயல். இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அதன்படி மொத்தமாக இதுவரை 300க்கும் மேற்பட்ட நபர்களிடம் நேரடி சாட்சியங்களும், 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும், 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பரிசோதனைகளும், அறிவியல் பூர்வமான முறையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இத்தகைய சூழலில் தான் தமிழக அரசு இந்த சம்பவத்தில், முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய 3 பேருக்குத் தொடர்பு இருப்பதாகப் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முட்டுக்காடு ஊராட்சித் தலைவர் பத்மாவின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாகக் குற்றப்பத்திரிகையில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதில் முரளிராஜா வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு குரல் மாதிரி பரிசோதனை, டி.என்.ஏ. பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய 2 இளைஞர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த 3 பேரிடமும் ஆரம்பத்தில் இருந்தே சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அறிவியல் பூர்வமான சாட்சிகள் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இவர்களை சம்பந்தப்பட்ட நபர்களாகக் கருதியுள்ளனர்.
இந்நிலையில் வேங்கை வயல் தொடர்பான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது எனக் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூவர் சார்பில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்று சி.பி.சி.ஐ.டி. மனுத் தாக்கல் செய்துள்ளது.அதில் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் புகார்தாரர்களை இதுவரை விசாரிக்காமல் இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனப் பட்டியலின மக்கள் சார்பில் வி.சி.க. வழக்கறிஞர் பாரிவேந்தன் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் குற்றப்பத்திரிக்கையின் நகல் வேண்டுமென்று கோரிக்கைகள் இந்த மனுவில் இடம் பெற்றுள்ளன.