கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் ஊரடங்கு, சில தளர்வுகளுடன் வரும் ஜூன் 21ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பொதுமக்களும் பல்வேறு பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இதுகுறித்து நடிகர் செந்தில் பெயரில் ட்விட்டரில் கருத்து ஒன்று வெளியாகியிருந்தது. அதில்... "மக்களின் வாழ்க்கையைவிட டாஸ்மாக் முக்கியமா? தயவுசெய்து டாஸ்மாக்கை மூடிவிட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற மு.க. ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறோம். நன்றி! #CloseTasmac" என பதிவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டு அரசு மீது அவதூறு கருத்துகள் பரப்பப்படுவதாகவும், தன் பெயரில் உள்ள போலி ட்விட்டர் கணக்கை நீக்கக் கோரியும் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் புகார் அளித்துள்ளார்.