கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் மானந்தவாடி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவர் காபி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது புலி தாக்கியதில் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த புலியை உயிருடனோ, சுட்டுப்பிடிக்கவோ நடவடிக்கை எடுக்கக் கேரள மாநில அரசு உத்தரவிட்டது. மேலும் புலியைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர் ஒருவரும் படுகாயமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து பஞ்சரக்கொல்லி என்ற இடத்தில் தலைமை வன கால்நடை அதிகாரியான அருண் சக்கரியா தலைமையிலான குழுவினர் முகாமிட்டிருந்தனர். அங்குப் புலி நடமாடுவதைக் கண்காணித்த சிறப்பு மீட்புக் குழு அதிகாரி ஜெயசூர்யா, அதன் மீது மயக்க மருந்து ஊசியைச் செலுத்தினார். இத்தகைய சூழலில் தான் வயநாட்டில் ஆட்கொல்லி புலியைச் சுட்டுக்கொல்ல அம்மாநில அரசு இன்று (27.01.2025) உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த உத்தரவின் பேரில் புலியைச் சுட்டுக்கொல்ல வனத்துறையினர் காட்டிற்குள் நுழைந்தனர். அப்போது புலி மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாகக் கிடந்தது. இந்த சம்பவம் வனத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் ஆட்கொல்லி புயல் உயிரிழந்தது எப்படி என போலீசாரும், வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.