Skip to main content

தொடரும் கைது சம்பவம்; மீனவர் சங்க கூட்டமைப்பினர் அவசர ஆலோசனை!

Published on 27/01/2025 | Edited on 27/01/2025
arrest incident Federation of fishermen association urgent meeting

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300க்கு மேற்பட்ட படகுகளில் உரிய அனுமதிச் சீட்டு பெற்று விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி மீனவர்கள் தனுஷ்கோடி- தலைமன்னார் இடையிலான கடற்பரப்பில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 34 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று முன்தினம் (25.01.2025) இரவு கைது செய்தனர்.

அதோடு மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, ஒரே இரவில் தமிழக மீனவர்கள் 34 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பாக அவர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு நேற்று (26.01.2025) கடிதம் எழுதியிருந்தார்.

அதே சமயம் கைது செய்யப்பட்ட 34 மீனவர்களையும் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (27.01.2025) அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளனர். இந்த  ஆலோசனைக் கூட்டத்தில் சிறைபிடிக்கப்பட்ட 34 மீனவர்களையும், இலங்கை சிறையில் உள்ள 60க்கும் மேற்பட்ட மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்த உள்ளனர். 

சார்ந்த செய்திகள்