Skip to main content

“மீனவர்களின் எதிர்காலத்தை இருண்டதாக ஆக்கியுள்ளது” - முதல்வர் வேதனை! 

Published on 27/01/2025 | Edited on 27/01/2025
CM mk stalin agony It has made the future of fishermen bleak 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் 34 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அதன்படி மீனவர்கள் தனுஷ்கோடி அருகே நேற்று முன்தினம் (25.01.2025) அன்று இலங்கைக் கடற்படையினரனால் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு நேற்று (26.01.2025) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் கைது செய்யப்படும் மற்றொரு சம்பவத்தை மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். 25.01.2025 அன்று ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை (தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 மீனவர்கள்) தனுஷ்கோடி அருகே அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள், கடலோர மீனவ சமுதாயத்தினரிடையே பதட்டத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்துவதோடு அவர்களது எதிர்காலத்தை நிச்சயமற்றதாகவும், இருண்டதாகவும் ஆக்கியுள்ளது.

எனவே இலங்கை கடற்படையினரால் நமது  மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க உறுதியான தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். எனவே, இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கவும் தூதரக வழிமுறைகள் மூலம் தேவையான அவசர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்” எனக் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்