![Boondi Lake floods](http://image.nakkheeran.in/cdn/farfuture/U0NFUmhq29hDlFhmjwV2EuosC9vXJlKWn20V-aMwIac/1637375238/sites/default/files/inline-images/z1015.jpg)
தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவலாக மழை பெய்துவரும் நிலையில், கொற்றலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வடசென்னை பகுதியில் உள்ள கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. திருவள்ளூர் வெள்ளிவாயல் பகுதியிலிருந்து தாழ்வான பகுதியில் உள்ள மக்களை முகாம்களுக்குச் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பூண்டி நீர்த் தேக்கத்திலிருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் பெய்யும் கனமழை காரணமாகப் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நேற்று (19.11.2021) கொற்றலை ஆற்றில் 35 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
மேலும், நீர்வரத்து அதிகமாவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை அடிப்படையில் மத்திய தேசிய மீட்புப் படையினர் 22 பேரும், மாநில பேரிடர் மீட்புப் படையினர் 31 பேரும் இரவுமுதல் தயார் நிலையில் உள்ளனர். வடசென்னை உட்பட, தாழ்வான பகுதியான வெள்ளிவாயல் கிராமப்பகுதியில் கொற்றலை ஆற்றின் வெள்ள நீர் புகுந்திருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தாழ்வாக உள்ள பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றும் பணியில் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் செல்வன், வட்டாட்சியர் மணிகண்டன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் முகாமிட்டு பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.