புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒவ்வொரு ஆண்டும் கல்வியில் சாதனை படைத்து வரும் பள்ளிகளில் ஒன்றாக உள்ளது. அடுத்தடுத்து வரும் மாணவிகளை சாதிக்க தூண்டும்விதமாக முன்னால் மாணவிகள், பெற்றோர்கள், சமூக நல ஆர்வலர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்க நாணயம் முதல் ஒவ்வொரு மாணவிக்கும் பரிசுகளை வழங்கி சிறப்பித்து வருகிறார்கள். அதனால் பள்ளி மாணவிகளின் சாதனை தொடர்கிறது.
இந்த நிலையில் மாணவிகளே இணைந்து பள்ளியில் நூலகம் தொடங்க திட்டமிட்டு 825 மாணவிகளும் இணைந்து 600 புதிய புத்தகங்களை வாங்கி பள்ளி ஆசிரியர்களிடம் வழங்க திட்டமிட்டனர். அதன்படி புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் வாங்கப்பட்ட புத்தகங்களை ஆசிரியர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மெ.கோவிந்தராஜ் தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சி.சின்னசாமி முன்னிலையில் நடந்தது.
விழாவில் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடம் 600 புத்தகங்களை மாணவிகள் வழங்கினார்கள். மாணவிகளின் ஆர்வத்தை பார்த்த 30 ஆசிரியர்களும் தங்கள் பங்காக ஆளுக்கொரு புத்தகங்களை பள்ளிக்கு வழங்கினார்கள். மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட புத்தகங்களை பள்ளி நூலக அலுவலர் எஸ்.நதிராபேகத்திடம் பள்ளி தலைமை ஆசிரியர் வழங்கினார். அனைத்து புத்தகங்களும் பள்ளி நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புத்தகம் வழங்கிய பள்ளி மாணவிகள் கூறும்போது.. ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுவார்கள். அதனால் அந்த நாளில் மாணவிகள் அனைவரும் ஆசிரியர்களிடம் புத்தகம் வழங்கி நூலகம் அமைக்கலாம் என்று மாணவிகள் இணைந்து திட்டமிட்டு அனைத்து மாணவிகளிடமும் பணம் சேகரித்தோம். ஆனால் அந்த நேரத்தில் கஜா புயல் வந்து பெரிய பாதிப்பு எற்பட்டதால் அந்த நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. அதனால் தற்போது புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் புத்தகங்களை வாங்கி வந்து பள்ளி தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்களிடம் வழங்கியுள்ளோம்.
இனி வரும் மாணவிகள் போட்டித் தேர்வுகளுக்கு தயாரா வசதியாக அதற்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் சேகரித்துள்ளோம். அதே போல இங்கே படித்துவிட்டு கல்லூரி படிப்பையும் முடித்து போட்டித் தேர்வுகள் மூலம் வேலை தேடும் முன்னால் மாணவிகளும் எங்கள் நூலகத்தில் வந்து புத்தகங்களை எடுத்து படித்து பயன்பெறலாம். இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டோடு முடிந்துவிடாது. ஓவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களை கௌரவிக்க நூலகத்திற்கு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சியை மாணவிகள் செய்வார்கள். எங்களின் ஆர்வத்தை பார்த்து ஆசிரியர்களும் தங்கள் பங்காக புத்தகம் வழங்கி உள்ளார்கள். இன்னும் சில ஆண்டுகளில் பெரிய நூலகம் உள்ள அரசு பள்ளி கீரமங்கலம் மகளிர் மேல்நிலைப் பள்ளி என்ற சாதனையை படைப்போம் என்றனர்.