Skip to main content

ஏரியில் மிதந்த இளம்பெண் சடலம்! 

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

The body of a young girl floating in the lake!

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள விஜயமாநகரம், புதுவெண்ணைக்குழியைச் சேர்ந்த வேலு என்பவரின் 19 வயது மகள், வேப்பூர் அருகே ஐவதகுடியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் ஒன்றில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். கடந்த சில தினங்களாக தனது தாய் ராஜலட்சுமியுடன் மங்கலம்பேட்டை அருகே பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள தனது சகோதரி வேதவள்ளி வீட்டில் வசித்துவந்துள்ளார்.

 

இந்நிலையில், கடந்த 18ஆம் தேதியன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்களும் அப்பெண்ணின் தோழிகளும் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் அவரது தாய் ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். 

 

இந்நிலையில், நேற்று (20.12.2021) ரூபநாராயணநல்லூர் ஏரியில் பெண் ஒருவர் சடலமாகக் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மங்கலம்பேட்டை போலீசார் விரைந்து சென்று அந்த சடலத்தை மீட்டு ஆய்வு செய்தனர். ஆய்வில், அவர் காணாமல் போன புதுவெண்ணைக்குழியைச் சேர்ந்த 19 வயது பெண் என்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் போலீசார் அனுப்பிவைத்தனர். தொடர்ந்து அப்பெண்ணின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததால், மீன்கள், நண்டுகள் கடித்து காயம் ஏற்பட்டதா? அல்லது யாரேனும் கொலை செய்துவிட்டு ஏரியில் வீசிச் சென்றனரா? என பல்வேறு கோணங்களில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்